Monday, June 29, 2009

ஒரு திருமண விருந்தில்........

இரவு மாப்பிள்ளை அழைப்பு முடிந்து சாப்பாட்டுப் பந்தி. இலை முழுவதும் கலர் கலராய் பதார்த்தங்கள். ஒரு பிரபலமான 'கேட்டரிங்க் காண்ட்ராக்டர்" ரின் கைவண்ணம். யூனிஃபாம் ட்ரஸோடு சுறுசுறுப்பாய் பரிமாறிக்கொண்டிருந்த இளைஞர்கள். (அந்தக் காலம் மாதிரி இல்லை. "டேய் நாராயணா! சாருக்கு ரசம் போடு!" என்று தலைமை பரிசாரகர் கட்டளையை ஏற்று, அந்த வயதான நாராயணர், ஆடி அசைந்து நம் இலைக்கு வரும் நமக்கே வயசாகிவிடும்!)

இலைக்கு போண்டா பறிமாறியபடி வந்த இளைஞன் என் இலையில் வைத்தான். அவன் கையில் பாலிதீன் உறை. (சுகாதாரம்!)
நான் அவனை நிமிர்ந்து பார்க்க, "என்ன சார்?. இன்னும் ரெண்டு வைக்கட்டுமா?" என்றான்.
"அதுக்கில்லேப்பா.....இதைத் தொடறதுக்கே நீ "அருவருப்பு" பட்டுக்கிட்டு கைல "க்ளவுஸ்" போட்டுக்கிட்டு எடுத்து வைக்கிறியே.....நாங்க அருவருப்பு படாம இத சாப்பிட, நாக்குல மாட்டிக்கறதுக்கு 'க்ளவுஸ்" தருவீங்களா?"

பையன் முகம் கலவரப்பகுதியாக காட்சியளிக்க, பக்கத்தில் சப்பாத்தியோடு மல்லுக்கட்டிக்கொண்டிருந்த என் மனைவி, அவனிடம் "நீ போப்பா தம்பி, எப் போதும் இவரு இப்படித்தான்,,,,ரொம்ப வாய்க் கொழுப்பு!"
"வாய மூடிக்கிட்டு சாப்பிட்டோமா, போனோமான்னு இல்லாம எதுக்கு அந்தப் பசங்கக்கிட்ட வம்பு வளக்கறீங்க?" - மனைவி.

"வாய மூடிக்கிட்டு' எப்படி சாப்புடறதுன்னு தெரியலையேடி....."- அக்கம் பக்கத்தார் அறியாத வண்ணம் என் இடுப்பில் ஒரு இடி!


- கிரிஜா மணாளன்

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home